கவிதையின் தலைப்பே கவிதை....
உன் வயித்துல என் முட்டி மடங்குமுன்னே
முக்காணியில பணம் சேத்தவளே!
உன் வயிறு கனக்கும் முன்னே
ஊர் கனைக்க பேரு வச்சவளே!
தொப்புள்க்கொடி வளருமுன்னே
எனக்கு தங்கத்துல கொடி புடிச்சவளே !
தூங்கிய ஊரை கதறி நீ எழுப்ப
கதறி விழுந்த என்ன பார்த்து
ஆனந்த கண்ணீர் விட்டு நீ அழ!
அன்று மட்டும் தான் நான் அழ நீ சிரிச்ச!
சாமத்துல நான் கதற
உன் மடி சுரந்து உறங்கவச்ச!
புள்ளி மான போல கருப்பு புள்ளி வச்சி
முத்தத்தில தவள விட்ட !
வச்ச வாசம் என் மூச்சுக்குள்ள நிக்குதடி!
பச்ச நிற மேல்சட்டை பவளநிற கால்சட்டை
எட்டி உதச்ச எனக்கு ஏர்பூட்டி நீ விட்ட!
மூத்த மகன் எனக்கு பின்னே முத்தாய் மூணு பெத்தெடுத்த
அதுல ரெண்டு உன் ஜாதி,
உன் உதட்டு சாயமெல்லாம் என் நெத்தியில
நீ வச்ச பொட்டுதான்!
விரலால வச்சி நீயே உதட்டவச்சி
மல்லிகபூ முத்தமிட்டு மை அழிச்ச!
பட்டுல படுக்கவச்சி
பட்டுன்னு கூப்டுவதும் சிட்டுன்னு கூப்டுவதும்
இன்னமும் இந்த செவி சவ்வ கிழிக்குதடி!
புட்டிப்பால் குடிக்காத என்ன பாத்து
அன்னமே ன்னு நீ அழச்ச!
ஆறு மணிக்கே ஆராரோ! ஆரம்பிச்சி
பத்துமணி வர பட்டினியா நீ கிடந்த!
பத்தாம் வகுப்பு வரை மண்ணெண்ணை விளக்குலதான்
தினமும் என்ன உன் மடிசாச்ச!
புரியாத வயசுல புதிர்பாட்டு நீ படிச்சி
அல்லி மொட்டுன்னு அடி மடியில தூங்கவச்ச!
ஆறு வயசுல எட்டணா நான் திருட உரலில் கட்டி வச்சி
பச்ச மிளகாய் ஒத்தடமும்
அகத்திகம்பு அடி உதையும் நீ கொடுத்த!
என் செல்லமே அடுத்த நொடியே என் கூடவே நீ அழுத!
அரும்பு மீசை ஆள்காட்டும்போது
குறும்பாய் நீ திருக விரும்பியே அடிக்கடி
தூங்குவதுபோல் நான் நடிச்சேன்!
வச்ச பாசத்துக்கு எப்பவுமே
வட்டி கணக்கு பாத்ததில்ல!
மூணாம் வகுப்புதான் நீ படிச்ச
பீடி சுத்திதான் எங்கள படிக்கவச்ச!
ஏ பவள கொடியே தொண்டையில வந்த கட்டி
என் அழுகையோடு உறவாடுதடி!
நல்ல வேளை சளியோடு செத்துபோச்சி
இல்லேன்னா உன்னோடு நானும் செத்ருப்பேன்.
படி படின்னு ஒரு நாளும் சொன்னதில்லை
என் மகன் படிப்பான்னுதான் சொல்லிருக்க!
பணம் கஷ்டத்த பாத்தாலும் உன் குணம்
கஷ்டத்த நான் பாத்ததில்ல!
விருந்துக்கு போனாலே விரும்பமாட்ட என் பிரிவ
எப்படி செல்லம் தாங்கிகிட்ட இந்த 3 வருஷம்!
வயலில விளைஞ்ச நெல்லு மனைக்கு வரும்முன்னே
மண்டியில மடியவச்ச என் படிப்புக்காக!
படிசிட்டேண்டி நீ நினச்ச அளவுக்கு
செல்ல மயிலே உனக்கு ஓய்வு தர
வேலைக்கு போறேண்டி சீக்கிரமா........