ஈழத்தில் உயிர்...


சுனாமி , தானே இவை இறந்தகால 
இயற்கை சீற்றங்கள்..
இதுமட்டும்தான் பலஆண்டுகளாக நிகழ்கால
செயற்கை சீற்றம்..

இங்கு உயிர்களின் வெள்ளம் 
கரைபுரண்டோடுகிறது..
அணைகட்டி உயிர்சேகரிக்கும் 
உணர்ச்சியில்லா அரசு..

'வற்றாத ஜீவநதி" என்று 
வட்டமிட்டு வாய்விட்டு சிரிக்கும் 
வெள்ளம்பருகும் வெண்பருந்து..

ஒவ்வொரு மனிதனின் சொந்தநிலம் 
ஆறடி 
இங்கு அதிலும் ஆயிரம் பங்குகள்..

ஓயாமல் உழைத்துகொண்டிருக்கும் 
உயிகொல்லி ஆயுதம்..
இராணுவ உடையில் சுட்டுப்பொசுக்கும்
வெட்டியான் வீரர்கள்..

குறிபார்க்கும்போது 
அம்மா என்று அலற துடித்தவாய்
வார்த்தை உதிர்க்குமுன் 
இதயத்தின் துடிப்பை நிறுத்தியது..

அமைதியும் ஆயுதமும் போரிட்டு கொல்கின்றன
அடிக்கடி மன்னிக்கவும் நொடிக்குநொடி..

இப்போதெல்லாம் 
ஊளையிடும் நரிகள் தங்கள் பதவியை 
மனிதஉயிர்களுக்கு பரிசளித்துவிட்டன..

இங்குள்ள வானொலிகளில் 
ஒப்பாரி பாட்டுதான் விருப்பநிகழ்ச்சியாம் 
பீரங்கிகளும், வெடிகுண்டுகளும் 
நிகழ்ச்சியின் நடுவின் விளம்பர தூதுவர்கள்..

இப்போதெல்லாம் கொள்ளிக்கு மூத்தமகனில்லை 
வருத்தெமெல்லாம் வழியேறி
யுத்தத்திற்கு புள்ளிவைக்க ஆளில்லாத வருத்தம்தான்...

ஆறுவயது சிறுமிகூட 
இங்கு விந்து பாய்ந்து 
உயிர் உதிர்க்கிறாள்..
பல வாள் வீச்சுகளெல்லாம்
பல்வீழ்ந்த பழுத்தவர்கள் மீதுதான்..
இதற்கிடை வயதுக்காரர்கள் 
தங்களால் தாங்கமுடிந்த 
குழல்குண்டுகளை தாங்குகின்றனர்.. 

இது ஈழம் மட்டுமல்ல இனமும்தான் 
என்று நெஞ்சில் பதியவைக்கவேண்டும் 
அமைதியை உதயமாக்கவேண்டும்..